ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பக்தர்களின் வசதிக்காக ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் அளித்துள்ள மனுவில், “ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளது. இந்த புனிதத் தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.தற்போது தெற்கு ரயில்வே சார்பில் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து கோவைக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன. கொடுமுடி ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் ஜன்சதாப்தி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு மட்டுமின்றி, கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதே போல ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படுகின்றது. இந்த ரயில் அதிகாலை 3:40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிடுகின்றது. அதிகாலை நேரத்திற்கு சென்றுவிடுவதால் பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவிடமும் திமுக எம்.பி பிரகாஷ் அளித்துள்ளார்.