கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு முடித்த இளம்பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக புரோக்கர் ஒருவரின் மூலம் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் ஆண்டோ மெர்லின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண், 'தன்னை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். ஆனால் எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்ட அவர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தனர். மேலும் மிரட்டல் விட்டதோடு எனக்கு பல்வேறு வகைகளில் காயங்களையும் ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லை' எனப் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்து இருந்தார். மேலும் இளம்பெண்ணின் பேட்டிகள் மற்றும் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இளம் பெண்ணைத் துன்புறுத்திய புகாரில் திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகிய இருவரும் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.