
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், சென்னையில் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின், “அடுத்து அமையப் போவது நமது ஆட்சி தான்! நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்! நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும்! நம்மால்தான் தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை - சாதனைகளைப் படைத்திட முடியும்! அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!” என்று உரையைத் தொடங்கிவிட்டு, “உங்களது உழைப்பை முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிக் கொடுத்தால் மட்டுமே முழு வெற்றியைப் பெற முடியும். ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள்தான் தேவை. 117 இடத்தை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. அது பெருமை அல்ல. அனைத்து இடங்களிலும் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும்”என்றார்.

அடுத்து முக்கியமான விஷயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் “சட்டமன்றத்தின் படிக்கட்டை மிதிக்காமல், அண்ணா அறிவாலயத்துக்கே வராமல், ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டு, கழகத்தை அவரது கிளையில் வளர்த்து வைத்திருக்கிறானே ஒரு தொண்டன், அவனை நீங்கள் மதிப்பதாக இருந்தால், அவனது உழைப்புக்கு நீங்கள் மரியாதை செலுத்துவதாக இருந்தால், கழக நிர்வாகிகள் உங்களுக்குள் உள்ள வேறுபாடுகள், மாறுபாடுகளை இன்றோடு, இந்த இடத்தோடு, இந்த நொடியோடு விட்டுவிடுங்கள்.
கெட்டுப் போன நிலத்தில் எந்தப் பயிரும் எப்படி முளைக்காதோ, அதுபோல மனமாச்சர்யங்கள் உள்ள மனம் கொண்டவர்களால், அடுத்தவருக்காக உழைக்க முடியாது. எல்லோரும் - எல்லோருக்காகவும் உழைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்.
நம்மவர்களே நம்மவர்களை வீழ்த்த நினைத்தால், அது உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம்! சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்து, ஆளும்கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர்கள், அதைவிட மோசமானவர்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, அனைவருக்கும் உண்டு.
யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர் - என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, வெற்றி என்ற ஒற்றை வார்த்தைதான்” என்று உரையை முடித்தார்.
‘யார் யாரோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தலைமைக்கு தெரியும்போல, நடவடிக்கைதான் எப்போது?’ எனத் தெரியாமலே, கூட்டத்திற்கு வந்த உடன் பிறப்புகள், அறிவாலயத்தை விட்டு வெளியேறி, சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.