சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா என்பதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காலையில் சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனு கொடுக்க வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் வீட்டிற்குச் சோதனைக்கு வந்த போது கதவை மூடி யாரும் இங்கிருந்து வெளியே போகக்கூடாது என்று கூறியுள்ளனர். அதனால் மனுகொடுக்க வந்த ராஜேந்திரன் அமைச்சர் வீட்டிலேயே மாட்டிக்கொண்டார். காலையிலிருந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கூட தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அமலாக்கத்துறை அவரை வெளியே அனுப்பியுள்ளது.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “நான் அமைச்சரிடம் எங்க தொகுதி கலைக்கல்லூரி தொடர்பாக மனு கொடுக்க வந்தேன். அப்போது அமைச்சர் வீட்டின் கதவு வழியாக எட்டிப்பார்த்தேன் என்னை உடனே அதிகாரிகள் உள்ளே வரச்சொல்லி என்னுடைய செல்போனை வாங்கிக்கொண்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். நான் இதய நோயாளி என்னை வெளியே விடுங்கள் என்று கூறியும் கேட்கவில்லை. வெளியே இருந்து டீ, தண்ணீர் எல்லாம் வாங்கி கொடுத்தார்கள், ஆனால் அதையும் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதன்பிறகு தற்போது அதிகாரிகள் என்னை அழைத்து எதற்காக உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார்கள். நானும் வந்த காரணத்தை கூறினேன். “என்னைக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். கொண்டு வருவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை; கொண்டு போவதற்கும் இங்கேயும் ஒன்றுமில்லை” என்று கூறினேன். அதன் பிறகு என்னுடைய செல்போனை கொடுத்து நீங்கள் செல்லலாம் என்றார்கள். ஆனால் நான், எங்க தளபதி எங்களை அப்படி வளர்க்கவில்லை என்னால் வெளியே போகமுடியாது என்று கூறினேன். அவர்கள் கேட்காமல் என்னிடம் போனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்கள். 30 வருடங்களுக்கு ஸ்டாலினுடன் எடுத்த புகைப்படத்தை எனது பர்சில் வைத்திருக்கிறேன். நான் கட்சிக்காரன். பாஜக அண்ணாமலை மாதிரி பாதியில் கட்சிக்கு வரவில்லை. இப்போது கட்சியில் இருந்து தீ குளிக்கச் சொன்னாலும் தயாராக இருக்கிறேன்” என்றார்.