![dmk member passed away pudukkottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/6TTqv437DMC0mup79cIHhvtNzvSJvlB38dYJ4ByFeow/1684719279/sites/default/files/inline-images/th-1_3998.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள வெள்ளாளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவி (50). திமுக பிரமுகரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தேடிப் போன போது அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ரத்த காயங்களுடன் சடமாக மிதந்துள்ளார். கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் வந்து சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரவியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பமாட்டோம் என்று 3 மணி நேரம் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கறம்பக்குடி வந்த உறவினர்கள், ரவியின் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ள நபர்கள் ரவியின் நிலத்தை கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்துவந்த நிலையில் சடலம் கிணற்றில் கிடப்பதால் நிலம் கேட்டு தொல்லை கொடுத்தவர்களே ரவியை கொன்று கிணற்றில் வீசியிருக்கலாம். அதனால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்து கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடந்த நிலையில் அங்கு வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பிரேதப்பரிசோதனை முடிந்த பிறகு அந்த ஆய்வு முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு களைந்து சென்றனர். இதனால் சுமார் 6 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரவியின் உறவினர்கள் கொடுத்த புகாரில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரவியின் சடலத்தை வாங்கமாட்டோம் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் சடலத்தை வாங்காமல் சென்றுவிட்டனர். மேலும் உறவினர்கள் கொடுத்துள்ள புகாரில் சிலர் பலமான அரசியல் அதிகாரத்தில் இருப்பதால் தான் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். கைது நடவடிக்கை இல்லை என்றால் சடலம் வாங்க முடியாது என்றனர்.
போலீஸ் தரப்பிலோ ரவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் நிலப்பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் சிலர் நபர்கள் பெயர்கள் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளனர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலை தான் என்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் 3 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.