Skip to main content

எச்.ராஜாவை வெளுத்து வாங்கிய அறநிலையத்துறை பெண் ஊழியர்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
Struggle against H. Raja



கோயில் ஊழியர்களை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கண்டித்து திருவாரூரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அப்போது பெண் ஊழியர் ஒருவர் எச்.ராஜாவை கண்டித்து பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

அந்த பெண் ஊழியர் பேசுகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நம்ம துறையை பற்றி அவதூறாக பேசிக்கொண்டே வருகிறார். தொடர்ந்து நீண்ட நாட்களாக பேசி வருகிறார். 
 

நாமும் ஏதோ சரி, ரோட்ல போற நாயி கொறச்சிக்கிட்டு இருக்குன்னு பொறுத்துக்கிட்டு இருக்கிறோம். அது நேற்று இரவு வேகமாக கடிச்சிருச்சி. எப்படியின்னா, எச்.ராஜா தலைமறைவு தனிப்படை வைத்து போலீஸ் தேடுகிறது என பேப்பரில் நியூஸ் வருது. அந்த பேப்பரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த கூட்ட மேடையில் ஒருவர் காட்டுகிறார். அந்த மேடையில் எச்.ராஜா உள்பட எல்லோரும் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

போலீஸ் பாதுகாப்போட இவர் மேடையில் அறநிலையத்துறையை பற்றி அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். அறநிலையத்துறை ஊழியர்கள் திருக்கோவில் நிலத்தை விற்பது மட்டுமல்லாமல் தன் வீட்டு பெண்களை விற்கிறார்கள் என்று அவதூறாக பேசியிருக்கிறார். இப்படி கீழ்த்தரமாக அசிங்கமாக பேசும் ஆளை இப்பத்தான் பார்க்கிறேன். 
 

இவர்தான் பாஜக தேசிய செயலாளராம். பாசிச பாஜக என்றால் என்ன என்பது நேற்று இரவு நீங்க எல்லோரும் பார்த்திருப்பீர்கள். நீதிமன்றத்தையும் கேவலமாக பேசுகிறார். காவல்துறையையும் கேவலமாக பேசுகிறார். காவல்துறையினர் பொறுமையாக இருப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டு பெண்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.
 

இவர் தமிழக பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவாரு, அதையெல்லாம் கேட்டுக்கிட்டு நாங்கள் வேலைபார்த்துக்கிட்டு இருக்க முடியாது. எங்கள் உணர்வுகளை, எங்கள் தன்மானத்தை தூண்டும் விதமாக எங்களை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜாவை கைது செய்யும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை. 
 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இவர் அறநிலையத்துறையை பற்றி கேவலமாக பேசி வருகிறார். நாங்களும் பொறுத்து பொறுத்துப்போய் இப்போது பொங்கி எழுந்துள்ளோம். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்துகின்றனர். எச்.ராஜா மன்னிப்பு கேட்கும் வரை நம் வீட்டு பெண்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பேசினார்.
 


 

சார்ந்த செய்திகள்