திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அன்பில் கிராமத்தில் திருச்சி தொழிலதிபர் வி.கே.என். அவர்களால் அன்பிலார் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது சிதிலம் அடைந்து இருந்தாலும் அன்பிலாரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவரம்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் அன்பிலாரின் பேரன் அன்பில் மகேஷ் சிதலம் அடைந்த சிலையை அகற்றிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை தயார் செய்தார்.
இந்நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேடப்பட்டி முத்தையா, எம்.பி திருச்சி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிலை திறப்பின்போது கருப்பு சிவப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
திருச்சி வந்த திமுக தலைவருக்கு டோல்கேட் பகுதியில் மாவட்ட திமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதைப் போலவே, அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என பேசினார். பேசி முடித்தவுடன் சிலை அருகே சென்று சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.