தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். அதேபோல், தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதேபோல், வருமான வரித்துறைக்கு வரும் புகார்கள் அடிப்படையில் வருமான வரித்துறையினர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று (26/03/2021) முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்த நிலையில், மாலை 05.00 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, "தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகிறார்கள். வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களும், தொகையும் கைப்பற்றப்படவில்லை. பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் என்பதால் தேர்தல் பணியை முடக்க ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை நடத்துவதால் தி.மு.க.வின் வெற்றி பாதிக்காது" என்றார்.