திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (28/07/2021) காலை 10.00 மணிக்குப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். தனிமனித இடைவெளியுடன் நடந்த போராட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்துசெய்யாமல், கண்துடைப்புக்காக ஒரு கமிஷனை அமைத்து ஆய்வறிக்கை தந்துள்ளனர். நீட் தேர்வை ரத்துசெய்வதாக உறுதியளித்துவிட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்து செல்லும்போது ரூபாய் 1 லட்சம் கோடி கடன் வைத்து விட்டுத்தான் சென்றது. வளர்ச்சிப் பணிகளுக்காகத்தான் அதிமுக ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது.” என்றார்.