கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூர், வேப்பூர் ஆகிய இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடிகளை அக்கட்சி நிறுவனர் ஜி.கே.வாசன் ஏற்றி வைத்து பேசுகையில், "மத்திய மாநில அரசுகள் செயல்படாததால் தமிழகம் இருண்டு போய் கிடக்கிறது. வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் த.மா.க. போட்டியிடும்" என்றார்.
பின்னர் விருத்தாசலத்தில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டும், அரசு பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 2000 பேர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மேலும் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசும், என்.எல்.சியும் செய்து தரவேண்டும்.
காவிரியின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். சென்னை மாநகாராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்றியிருப்பது ஆட்சியாளர்களின் செயல்பாட்டால் தான் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
விகேடி சாலையில் எற்படும் விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் அச்சாலை பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்தி, முக்கிய பணிகளுக்கு மணல் விநியோகம் செய்து பொதுமக்களூக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் பட்டாகத்திகளுடன் பொதுமக்களை அச்சுறுத்துவது ஏற்புடையதல்ல, மாணவர்கள் அடுத்து வரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். ஒழுக்கத்துடன் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்.
இவ்வாறு வாசன் கூறினார்.
அவருடன் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி, வட்டார தலைவர் கண்ணுசாமி, துணை தலைவர் துளசிமணி, நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.