திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையின் ஒரு பகுதியான ஏலகிரியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகனின் பண்ணை வீடு உள்ளது. துரைமுருகன் ஓய்வு நேரங்களின் போது அந்த வீட்டிற்குத் தனது குடும்பத்துடன் சென்று தங்குவார். கரோனா காலக்கட்டத்தில் அந்த வீட்டில்தான் பெரும்பாலான நாட்கள் பாதுகாப்பான ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி காலை அந்த வீட்டுக்கு வந்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே, அறைகளில் பல பொருட்கள் கலைந்து இருந்தன. இதுபற்றி துரைமுருகன் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தரச்சொல்ல அதன்படி ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டன.
திருட்டு முயற்சி குறித்து கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி.- க்கு தகவல் சொல்லப்பட்டதும், அவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டில் பணமிருக்கும் என்ற தகவலைத் தொடர்ந்தே கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்கள் என்கிறார்கள் காவல்துறையினர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடும் முயற்சியில் உள்ளனர். வீட்டில் இருந்து என்ன திருடுப்போனது என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.