தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
நேற்று, அதிமுக சார்பில் மதுரை திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறவக்குளம், கப்பலூர், தருமத்துப்பட்டி ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 'அதிமுக அறிக்கையில் மக்களைப் பாதுகாக்கும், மகிழ்ச்சியூட்டும் பல திட்டங்கள் வெளியாக இருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று வெளியான திமுகவின் தேர்தல் அறிக்கை காலி பெருங்காய டப்பா என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை திருமங்கலம் தொகுதி தேர்தல் பரப்புரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இருக்காது. அது வெறும் காலி பெருங்காய டப்பா. அறிக்கை விட்டே பழக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின். அரசாணை பிறப்பித்து பழக்கப்பட்டவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி'' எனப் பேசினார்.
இன்று மாலை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.