தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டாஸ்மாக் பணியாளர்கள் 17 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். அரசு விதிமுறைப்படி 2 வருடம் பணிபுரிந்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஆனால் 17 வருடங்களாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் இதுவரையில் பணி நிரந்தரம் செய்யபடவில்லை.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கரோனா பரிசோதனை அனைத்து பணியாளர்களுக்கும் செய்திட வேண்டும், 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டில் சேர்த்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்தும், பின்னர் கோரிக்கை முழக்கம் உட்பட பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு இதுவரையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினரை அழைத்துப் பேச முற்படவில்லை.
இதனை வலியுறுத்தி நாளை (25.8. 2020) தமிழகம் முழுவதும் உள்ள 4,000 டாஸ்மாக் கடைகளிலும், பணிபுரியும் உழியர்கள் 2 மணி நேரம் காலை பணியைப் புறக்கணித்து தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கமும் அதரவு அளித்துள்ளது.