சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.
காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூரில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட போதே கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் .இந்நிலையில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 'அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என வலியுறுத்தியுள்ளார்.