திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதிமுக தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டபோது, தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சின்ன மாயன் 23 ஊராட்சி பகுதிகளுக்கும் சேர்த்துப் பகிர வேண்டிய பொது நிதியை ஒன்றியக்குழு தலைவர் தனது சொந்த ஊராட்சி பகுதிக்கு மட்டும் ரூபாய் 84 லட்சத்தை ஒதுக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஒரே பகுதிக்கு அனைத்து நிதியும் ஒதுக்கப்பட்டால் மற்ற பகுதிகளுக்கு மக்கள் நலத் திட்ட பணிகளை எவ்வாறு செய்வது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குறுக்கிட்ட அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான நல்லதம்பி, இது அதிமுக ஆட்சி எங்கள் விருப்பம்போல்தான் செய்வோம் யாரும் எங்களை கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டும் தொனியில் பேசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் அதிமுக தலைவரின் தன்னிச்சையான போக்கை கண்டித்து அதிமுகவினரின் அராஜக செயலை கண்டித்தும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு முறைகேடுகளில் ஈடுபடுவதற்காக ஒரே ஊராட்சிக்கு மொத்த நிதியும் ஒதுக்கி இருக்கும் ஒன்றியக்குழு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் இச்சம்பவம் நிலக் கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.