நடைப்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போது திமுக- கூட்டணியில் இருந்த கட்சிகள், அதே நிலைப்பாட்டுடன் உள்ளாட்சித்தேர்தலில் களமிறங்கியுள்ளன. எனினும், ஒரு சில இடங்களில் கூட்டணி தர்மத்தினை மீறி போட்டி வேட்பாளருக்காக வாக்குகள் கேட்கும் "பகீர்" சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ளது சங்கராபுரம் ஊராட்சி. 21 ஒன்றரை சதுர கி.மீ.பரப்பளவு கொண்டதும், 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுமான இந்த ஊராட்சியில் அழகப்பா கல்லூரிகள், மத்திய மின்வேதியல் ஆய்வகம், அரசு மருத்துவமனை, பவர் கிரிட், கெமிக்கல் ஆலை மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியன உள்ளது. 4000 தெருக்களும், 120 கி.மீ.சாலைகளையும் கொண்ட இந்த ஊராட்சிக்கு குடிநீர், வீட்டு வரி, கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளில் மட்டும் ஆண்டுக்கு ரூ 1 கோடியே 20 லட்சம் வரை வருமானம் நேரடியாக கிடைக்கின்றது.
தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டித்தரும் இந்த சங்கராபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 10 வருடங்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர். இந்த முறை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆண் வேட்பாளருக்கு பதிலாக பெண் வேட்பாளர் என முறை மாறியுள்ளதால், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் சார்பாக முன்னாள் தலைவரின் மனைவி தேவி மாங்குடி என்பவர் போட்டியிடுகின்றார். அவருக்குப் போட்டியாக கல்லூரி தாளாளர் ஒருவரின் மனைவியான பிரியதர்ஷினி அய்யப்பன் என்பவர் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ.சுந்தரம் போட்டி வேட்பாளருக்கு ஆதரவளித்து கட்சிக்கட்டுப்பாட்டை மீறி கட்சியின் தலைமையால் நெருக்கடிக்கு உட்பட்ட நிலையில், திமுகவினர் சிலர் போட்டி வேட்பாளருக்காக வாக்குகள் கேட்டு களமிறங்கியது திமுகவினரின் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதன்கிழமை (25.12.2019) அன்று மதியம் 03.00 மணியளவில் பத்திரிகையாளர்களின் சந்திப்பை முடித்து கொண்டு, சங்கராபுரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் தேவி மாங்குடி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றியக்கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் சொக்கலிங்கம் மற்றும் சின்னத்துரையை ஆதரித்து பர்மா காலனி பகுதியில் திறந்த வாகனத்தில் வாக்குகளை சேகரித்தனர் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் தொகுதியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர்.
இதில் திமுக சார்பில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், மதுரை முன்னாள் மேயரும், பொறுப்புக்குழு உறுப்பினருமான பெ.குழந்தைவேலுவும், காரைக்குடி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சுப.துரைராஜூவும் தங்களுடைய வருகையை பதிவிட்டு வாக்குகள் சேகரித்ததை கண்காணித்தனர்.
இது இப்படியிருக்க புதன்கிழமை (25.12.2019) அன்று காலையிலேயே திமுக பொதுக்குழு உறுப்பினரும், காரைக்குடியின் முன்னாள் நகராட்சி தலைவருமான முத்து துரை மற்றும் திமுகவை சேர்ந்த சிலர் கூட்டணி தர்மத்தினை மீறி தந்தைபெரியார் நகரில் போட்டி வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தது சலசலப்பை உண்டாக்கியது. திமுகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் களத்தில் இருந்த பொழுதே போட்டி வேட்பாளருக்காக வாக்குகள் சேகரித்த திமுகவினர் விலை போனதாக கொந்தளித்து வருகின்றனர் கூட்டணிக்கட்சியிலுள்ள ஏனையோர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.