





திமுக தலைவர் கலைஞரின் மகளும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியை விமர்சித்து தன் டிவிட்டர் பதிவில் சர்ச்சையான கருத்தை வெளியிட்ட, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 5 மணியளவில் சேலம் அண்ணாசிலை, அஸ்தம்பட்டி, 5 ரோடு, சூரமங்கலம், சீலநாய்க்கன்பட்டி, அன்னதானப்பட்டி, பெரியார் சிலை ஆகிய ஏழு இடங்களில் எச்.ராஜாவின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் நடந்தது.
அந்தந்த பகுதி திமுக செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. வைக்கோல் மற்றும் துணிகளால் ஆன எச்.ராஜாவின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். அப்போது அவருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர். திமுக தலைவர் கலைஞர், கனிமொழி எம்.பி. ஆகியோரை விமர்சித்ததற்குக் கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். ஏழு இடங்களில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது சேலம் மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல், எச்.ராஜாவை கண்டித்து சிதம்பரம் திமுக தலைமைக்குழு உறுப்பினர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் திமுகவினர் கிள்ளையில் எச்.ராஜாவின் கொடும்பாவியை எரித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதேபோல், சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் எச்.ராஜாவின் கொடும்பாவியை கொலுத்தி அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.