திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒன்று, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இரண்டு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களிலும், மமக, விசிக தலா ஒருயிடத்திலும், சுயேட்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
திமுக நகர மன்ற தலைவர் வேட்பாளராக ஏஜாஸ்அகமதுவை அறிவித்தது திமுக தலைமை. இதனை நகரச் செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கழக மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷபீர் அகமதுவை சேர்மன் வேட்பாளராக முன்னிறுத்தினார். நகரமன்ற அலுவலகத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜாஸ் அகமது, சேர்மன் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆம்பூர் ந.செ ஆதரவோடு கவுன்சிலர் தொழிலதிபர் ஷபீர் அகமதுவும் மனுசெய்தார். அப்போது நகராட்சி அலுவலகத்துக்கு எம்எல்ஏ வில்வநாதன், எம்பி கதிர்ஆனந்த் வருகை தந்தனர். எம்.பியும் எம்.எல்.ஏ வும் நகராட்சி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டுமென திமுக ந.செ ஆறுமுகம் தரப்பினர் கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியபோது, ஏஜாஸ்அகமத் மற்றும் ஷபீர்அகமத் இருதரப்பிடையே சண்டை ஏற்பட்டது, தேர்தலை நடத்து என ஆறுமுகம் தரப்பு கவுன்சிலர்களும், நடத்தக்கூடாது என ஏஜாஸ்அகமத் தரப்பும் பேப்பர்களை தூக்கிவீசி, தேர்தலை நிறுத்து எனப் பிரச்சனை செய்தனர், தேர்தலை நடத்துங்கள், நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் மல்லுக்கட்டியதால் மாவட்ட ஆட்சியரிடம்மிருந்து வந்த உத்தரவுப்படி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆம்பூர் நகரக் கழக செயலாளர் ஆறுமுகம், கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிர்த்து வேட்பாளராக நின்ற ஷபீர்அகமத் இருவரையும் தற்காலிகமாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆம்பூர் நகர நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, நகர கழகத்தில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒரு கோஷ்டி, மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன் தலைமையில் ஒரு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ந.செ ஆறுமுகம் தொழிலதிபர் ஷபீர்அகமத்வை சேர்மனாகவும், தன்னை வைஸ் சேர்மனாகவும் முன்னிறுத்தி கவுன்சிலர்களிடம் பிரச்சாரம் செய்தார், தேர்தலுக்கு பணமும் தந்தார்.
மாவட்ட அவைத்தலைவர் கோஷ்டி பெரிய கம்பெனி முதலாளியும், சில முதலாளிகளும் இணைந்து திமுக பொதுக்குழு உறுப்பினரான கவுன்சிலர் ஏஜாஸ்அகமத்வை சிபாரிசு செய்தனர். மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ, ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் ஆதரவாக நின்றனர். இங்குதான் பிரச்சனையே உருவானது. நகர கமிட்டி சொல்வதை ஒதுக்கிவிட்டு, தொழிலதிபர் தரப்பு சொல்வதைக் கேட்டு தலைமைக்குச் சிபாரிசு செய்வது எந்த விதத்தில் நியாயம்?, கவுன்சிலர்கள் விரும்பியதால் தலைமை சொன்னதுக்கு மாறாக ஒரு வேட்பாளரை நிறுத்தினோம், கட்சி நிர்வாகியைத்தானே நிறுத்தினோம், அதற்காகக் கட்சியை விட்டு நீக்குவது எந்தவிதத்தில் நியாயம் எனக்கேள்வி எழுப்புகிறார்கள்.
மற்றொரு தரப்பு, தலைமையின் உத்தரவை மீறி வேட்பாளரை நிறுத்தியது முதல் தவறு, முதலாளிகளுக்கு ஆதரவாக தலைமை செயல்படுகிறது என்கிற தகவலைப் பரப்பியது பெரிய தவறு, எம்.பி, எம்.எல்.ஏவுக்கு எதிராக குரல் எழுப்பி அவமானப்படுத்தியது போன்றவற்றால்தான் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பவர்கள், ஷபீர்அகமத் பெரிய தொழிலதிபர் அவரை திமுக தொண்டர்கள், கவுன்சிலர்கள் சுலபமாக சந்திக்க முடியாது. அப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும், அதோடு ஆறுமுகத்துக்கு அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவை வாங்கியிருந்தார். இது எல்லாவற்றுக்கும் பணம் முக்கிய பங்கு வகித்தது என்கிறார்கள்.