தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். கடந்த 4ம் தேதி பெரியகுளம் நகராட்சி சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சுமிதா சிவகுமார் போட்டியின்றி நகராட்சி சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி அலுவலத்தில் தனது ஆதரவு நகர் மன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து பதவியேற்றார். பதவி ஏற்றதும் கட்சியினர் பொதுமக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். பதவி ஏற்ற முதல் நாளே பொதுமக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நகராட்சி அலுவலகம் பின்புறம் பாழடைந்து கிடந்த சுவரை அகற்றினார்.
தேர்தலின்போது மக்கள், அந்தச் சுவர் இருப்பதன் காரணமாக இரவு நேரங்களில் அங்கு மறைவாக மது அருந்துகின்றனர். மேலும், சிறுநீர் கழித்து பாதையை அசுத்தம் செய்கின்றனர். அதனால், அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை அடுத்து நேற்று பதவியேற்ற சுமிதா சிவக்குமார், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஜே.சி.பி. கொண்டு அந்த சுவற்றை அதிரடியாக உடைத்து தரைமட்டமாக்கினார்.
இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த தங்கதமிழ்ச்செல்வன், “கடந்த அதிமுக ஆட்சியில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்த ஒ.ராஜா அவர்களால் எழுப்பப்பட்ட இந்த சுவரை பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க திமுகவின் நகர் மன்றத்தலைவர் சுமிதா சிவக்குமார் முன்னிலையில் இடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் அதிமுக மற்றும் அமமுக பற்றி தற்போதைய நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “சசிகலா விவகாரத்தில் முதலில் தர்ம யுத்தம் நடத்தியது ஓ பன்னீர்செல்வம் தான். தற்போது இவர் ஆடும் நாடகம் மக்களிடையே செல்லாது” என்று கூறினார்.