அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். வீட்டில் இருந்தபடியே முக்கிய பிரமுகர்களை சந்தித்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகமும் சென்று நிர்வாகிகளை சந்தித்து வந்தார். மற்றபடி உடல்நலக்குறைவின் காரணமாக அரசியல் மேடைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இதுவரை பங்கேற்காகத நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று சென்னையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில் இன்று இரவு அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரும் வாய்ப்பு இல்லை என்று பேசப்பட்டு வந்தபோது, மருத்துவர்களை ஆலோசித்து வருகிறோம். கேப்டன் விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
கட்சியினரிடையே விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதை விடவும் அவர் பிரச்சாரத்திற்கு வந்தால் பேசுவாரா என்று அவரது ரசிகர்களும் தொண்டர்களும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கினார். விஜயகாந்தை பார்ப்பதற்காக தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டிருந்தனர்.
பிரச்சாரத்தில் மை பிடித்த விஜயகாந்த், ‘’நான் பேசுறது கேட்குதா..?’’என்று அவரது குரல் தழுதழுத்தபோது ரசிகர்களும், தொண்டர்களூம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பேச முற்பட்டார். பேச்சை இடையில் நிறுத்திவிட்டு, கூட்டணி கட்சி பாமக வேட்பாளருக்கு மாம்பல சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்தும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். பேசுவதில் சிரமம் இருப்பதால் அதிகம் பேசாமல் கட்சியின் சின்னம், வேட்பாளர்கள் பெயர்களை மட்டும் சொல்லி வாக்களிக்குமாறு கேட்டு பிரச்சாரம் செய்தார்.