போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய உயர்வு 01 செப்டம்பர் 2023 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும். இரண்டு மாதம் கடந்தும் முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்காதது ஆட்சியின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. மேலும் ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வுக்காகப் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், உயர்த்தாமல் காலம் கடத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
சமீப காலமாகப் பல வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. 22 ஆயிரம் வழித்தடங்களில் தற்போது 19 ஆயிரம் வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிகிறது. இதில் பல பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதினால் பொதுமக்கள் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் போக்குவரத்துத் துறை பெரும் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சிறப்பு நீதிபதியை கொண்டு அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு செய்து, இழப்பு எந்த விதத்தில் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, இலவசத் திட்டத்தால் போக்குவரத்துத் துறைக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது, அதற்கான தொகையை அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, நஷ்டத்தை ஈடு செய்வதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமையாகும். நஷ்டத்தை சரி செய்வதற்கு அரசு முயற்சி எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, அந்த நஷ்டத்தை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தலையில் சுமத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் பண பலன்களை உடனே வழங்காமல் காலம் தாழ்த்துவது, ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வினை உடனே உயர்த்தாதது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே நடத்தாதது, ஒரு மாதத்திற்கு முன்பே பண்டிகை முன்பணம், போனஸ் போன்றவை வழங்காதது, ஓய்வு பெறும்போது ஒரு வருடத்திற்கு முன்பே ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்தி பணி உயர்வினைத் தடுத்து நிறுத்துவது, தொழிலாளர்களின் பணப் பலன்களை எப்படியெல்லாம் குறைக்க வழி உள்ளதோ, அந்த வழியைத் தேடுவது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, அரசு பொதுத்துறையான போக்குவரத்துத் துறையை, தனியார் துறை மூலம் நடத்துநர்கள், ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்களை நியமிப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு, படிப்படியாகத் தனியார் மையத்திற்கு சாதகமாக அரசு செயல்படுகிறதோ என்ற அச்சம் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் முழு கவனம் செலுத்தி பொதுத்துறையைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் போக்குவரத்துத் துறையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிரந்தரமாகத் தீர்வு ஏற்படுவதற்கு, போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.