புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழா திராவிடா் கழகத்தின் முழுக்க முழுக்க பெண்களே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் சிறப்பாளராக கலந்து கொண்ட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் மதிவதனி பேசும் போது..
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் இனம் படித்த இனமாக இருந்துள்ளதை கீழடி ஆழமாக சொல்கிறது. அப்படி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படித்து வாழ்ந்த இனத்தை 70 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கவிடாமல் தடுத்த கூட்டத்தை ஒடுக்க மறுபடியும் படிக்க வைத்தது தந்தை பெரியார். ஆனால் மீண்டும் 70 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை தமிழ் இனத்தை படிக்க விடாமல் செய்ய மத்திய பா.ஜக அரசு கல்விக் கொள்கை, நீட் என்று நம்மை அடிமைப்படுத்த நினைக்கிறது. அதற்கு இந்த அ.தி.மு.க அரசும் துணை போகிறது.
நீட் எழுதினால் தான் சிறந்த மருத்துவராக முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் மாநில பாடத்தில் கிராமத்து அரசுப் பள்ளியில் படித்த மருத்துவர்கள் தான் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை செய்து வருகிறார்கள். ஆனால் மோடியின் குஜராத் உள்பட வடமாநிலங்களில் மருத்துவக் கல்லூரி குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள இடங்களை பிடிங்கிக் கொள்ள நீட் என்ற அரக்கனை கொண்டு வந்து அனிதா போன்ற சகோதரிகளை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீட் வராது வராது என்று தமிழக அரசும், அமைச்சர் விஜயபாஸ்கர் கடைசி வரை சொல்லிக் கொண்டே ஏமாற்றி விட்டார்கள்.
அதேபோல தான் குடியுரிமை திருத்த சட்டமும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு வராது வராது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். செய்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது என்று பேசினார்.