தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றி தலைமறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( வயது 52). இவரிடம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு, ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் தீபாவளி சீட்டு கட்டி முடித்த நிலையில், மொத்த தவணை தனக்கு தரவேண்டிய 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜிடம் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் பின்னல்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் ஸ்ரீ லட்சுமி சிறுசேமிப்பு என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் 50 லட்சம் பணத்தை வசூல் செய்து ஏமாற்றியதுடன் பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்கும் போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தலை மறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.