தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. மக்கள் காலையில் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்வதால் மக்கள் பட்டாசுகள் வெடிக்க முடியாமல் இருக்கின்றனர். அதேபோல், பல முக்கியமான கோயில்களிலும் மக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் மக்கள் காலை முதலேயே சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சரவெடியை வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது கைகளில் சானிட்டைஸர் உபயோகிக்கக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும், குழந்தைகள் பெரியவர்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.