தீபாவளிக்கு 14,460 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து அக்.15 முதல் 17 வரை 3 தினங்களுக்கு 14,460 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் அக்.18ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக பண்டிகை காலங்களில், சென்னை உள்பட வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வார்கள். அந்த வகையில், தீபாவளிக்கு 2, 3 தினங்களுக்கு முன்பே வெளியூர்வாசிகள் பஸ், ரயில்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளர் டேவிதார், இணை செயலாளர் நடராஜன், இணை ஆணையர் வேலுச்சாமி, 8 மண்டல மேலாண் இயக்குனர்கள், சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர், செங்கல்பட்டு, வண்டலூர் துணை ஆட்சியர்கள் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது, அதற்கான முன் ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் கோயம்பேடு, பூந்தமல்லி, வடபழனி, தாம்பரம், இசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே அந்த சமயத்தில் போலீசாருடன் இணைந்து மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நெரிசலை சமாளிப்பது குறித்தும் அமைச்சர் ஆலோசித்தார். இந்த ஆண்டு தீபாவளிக்கு நாள் ஒன்றுக்கு 4,820 என 3 நாட்களுக்கு 14,460 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கூட்டத்துக்குப் பின் அமைச்சர் அறிவித்தார். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படுகிறது. சென்ற ஆண்டு அக்.26 முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் நாள் ஒன்றுக்கு 4,208 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 5,43,079 பேர் பயணம் செய்தனர். 92,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் அக்டோபர் மாதம் 15 முதல் 17 வரை 3 நாட்கள் தினமும் இயக்கக் கூடிய 2,275 பஸ்களுடன் சேர்த்து 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 32,204 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிற ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நிச்சயம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதற்காக தான் தற்போது இடைக்கால நிவாரணம் வழங்குகிறோம். அரசு விரைவு பஸ்களில் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. அதுபோன்று நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.