சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேசுகையில், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டுள்ளீர்கள். சிலவற்றை ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும்.’ எனப் பேசினார். இதற்கு எதிராக நடிகை கஸ்தூரி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றியுள்ளது. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்குத்தான் உபதேசம் இவர்களுக்கு இல்லை. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்த கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியலிலிருந்து கைய எடுங்க” எனக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சனாதனத்தைப் பற்றிப் பேசியதற்கும் உதயநிதியைப் பற்றிப் பேசியதற்கும் திவ்யா சத்யராஜ் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், “கஸ்தூரி, அமைச்சர் உதயநிதியையும் அவர் பேசிய சனாதனத்தையும் பேச என்ன தகுதி இருக்கிறது. இவர் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு எது? இவர் பேசிய பேச்சு முழுமையாக ஒரு மத வெறியர் போல் தெரிகிறது. இந்த பிற்போக்கான செயல் பெண்களுக்கு இவர் செய்யும் துரோகம். சனாதனத்தால் பெண் உரிமை பறிக்கப்படுகிறது. ஒருவரை உயர்ந்தவர் மற்றொருவர் தாழ்ந்தவர் என்பதை கட்டமைத்த இந்த பாகுபாடுதான் சனாதனம். ஆகையால் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான இந்த சனாதனத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். கஸ்தூரி பேசிய பேச்சு முற்றிலும் தவறானது. நீதியின் பக்கம் நிற்க வேண்டுமே தவிர சாதியின் பக்கம் அல்ல. அவர் இதுபோன்று பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். மணிப்பூரில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்ட என்ஜிஓவுடன் இணைந்தும், ஈழத் தமிழ் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக, இலங்கையில் உள்ள அரசு நிறுவனத்துடன் கைகோர்த்தும் சமூக சேவைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.