கடந்த 2019ஆம் ஆண்டு கல்வி அலுவலர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலராகப் பணிபுரிந்தவர் சுடலை. அதுசமயம் நெல்லை மற்றும் சேரன்மகாதேவி உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பணி மாறி வந்திருக்கிறார் சுடலை.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று கடையத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு வருடாந்திர ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார். கல்வித்துறையின் மாவட்ட அதிகாரி முதன்முதலாக ஆய்வுக்கு வருவதால் பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்குப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க்கிரீடம் மற்றும் மாலை, சால்வையும் அணிவித்து அட்டகாசமாக வரவேற்பளித்துள்ளனர். அதிகாரியும் அதனை மனதாற ஏற்றுக்கொண்டதுடன், பள்ளியின் பதிவேட்டில் சால்வை போர்த்தி, கிரீடம் மாலை அணிந்த கெட்டப்பில் கையெழுத்திட்டவர், அதனைப் புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டார். அவரது இந்த ராஜபார்ட் ஆய்வு வாட்ஸ் அப்களில் வைரலானது.
இதுகுறித்து கல்வித்துறை மாவட்ட அதிகாரி சுடலை, “நான் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறேன். ஆய்வுக்கு நான் வரும்போது பள்ளியில் இந்த வரவேற்பு கொடுக்கும்போதே நான் வேண்டாம் என்றேன். ஆனால் நிர்வாகத்தினர் வற்புத்தியதால் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. மேலும், நான் நிறைகளைப் பேசும்போது குறைகளையும் குறிப்பிட்டு நவர்த்தி செய்ய ஏற்பாடு செய்வேன். இது பரவியது மனதிற்கு கஷ்டமாயிருக்கிறது” என்றார்.
தவிர அதிகாரி சுடலை நெல்லை மற்றும் சேரன்மகாதேவி பகுதிகளில் பணியில் இருந்தபோது, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அமைதியாகப் பணிபுரிபவர் என்கிறார்கள்.