அரசு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்துவரும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆசிரியர் தினத்தன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது தமிழக அரசு. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் விவரம் தீர்த்தனகிரி பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி என்.எல்.சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரை, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அசோகன், காட்டுமன்னார்கோவில் பருவதராஜ, குருகுல பள்ளி ஆசிரியர் தர்மராஜன், கண்டமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர் அமுதா, எல்லப்பன் பேட்டை ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் திலகம், பணிக்கன் குப்பம் ஆர்.சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆண்டோனி ராஜா, இடைச்செருவாய் ஊராட்சி பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி, பத்திரக்கோட்டை ஊராட்சி பள்ளி தலைமையாசிரியர் நாகராசு, சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் வீரப்பன் மற்றும் புவனகிரி பாரதி மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் பழனியப்பன் ஆகிய பதினோரு பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்று காலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகா முரி, விருது வழங்கினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி பேசும்போது, “விருது பெறும் ஆசிரியர்கள் இந்த விருதிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் மேலும் சிறப்பாக பணியாற்றி மாணவ மாணவியர்களின் கல்வியை மேன்மை அடைய செய்ய வேண்டும். கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள நம் மாவட்டத்தை மாநில அளவில் 10 இடங்களுக்குள் கொண்டுவரும் வகையில் ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். விருது பெற்றவர்கள் மட்டுமல்ல, விருது பெற முடியாதவர்களும் இவர்களைப் போன்று விருது பெற்று பெருமை சேர்க்கும் வகையில் பிள்ளைகளின் கல்விக்காக தங்களை முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வரவேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு பத்தாயிரம் ரூபாயை ஆட்சியர் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா செல்வராஜ் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக நன்றாக திறமையாக முழு அர்ப்பணிப்புடன் தங்கள் பணியை செய்து வருபவர்களை பாராட்டும் வகையில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இது போன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று கடலூர் மாவட்டம். அதை கல்வியில் மேம்படுத்தும் வகையில் சமீபகாலமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களைப் போன்றே அனைத்து ஆசிரியர்களும் கடும் முயற்சி செய்து அரசுப் பள்ளியில் சேரும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து கல்வி பண்பாடு ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து அவர்களை அனைத்திலும் சிறந்த திறமைசாலிகளாக வெளிக்கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுப்பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு படையெடுத்து வருவார்கள், அந்த நிலை விரைவில் வரும் என்கிறார்கள் அரசுப் பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் பலர். அதேநேரத்தில் தமிழக அரசும் அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் ஆசிரியர் பற்றாக்குறை போன்றவைகளை முழுவதும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார்கள். ஆசிரியர் பெருமக்கள் வரும் காலம் அரசுப்பள்ளிகளில் வளமான கல்வி காலமாக நிச்சயம் மாறும் என்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். ஆசிரியர் பெருமக்களுக்கு நக்கீரன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.