Skip to main content

டாஸ்மாக்கடை திறக்கக்கூடாது மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம், வாலிபர், மாதர் சங்கம் கோரிக்கை

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
டாஸ்மாக்கடை திறக்கக்கூடாது
மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம், வாலிபர், மாதர் சங்கம் கோரிக்கை



புதுக்கோட்டை அக்.3- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த சின்னங்கோன்விடுதியில் மீண்டும் அரசு மதுபானக் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கறம்பக்குடியை ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னான்கோன்விடுதி சமத்துவபுரம் அருகில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அரசு மதுபானக் கடை திறக்கபட்டது. அப்போது தங்கள் ஊருக்கு அரசு மதுபானக் கடை வேண்டாம் என பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய எழுச்சிமிக்க போராட்டத்தைத் தொடர்ந்து கடையைத் திறக்காமல் அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் கடையைத் திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் கடந்த செப்டம்பர் 28 அன்று முயற்சிகளை மேற்கொண்டது.  இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் எக்காரணம் கொண்டும் கடையைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தி ஊர்ப்பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய போச்சுவார்த்தையில் கடை திறக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வைக்கப்பட்டிருந்த மதுப்பாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கடையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக பேச்சு அடிபடுகிறது. எனவே, மீண்டும் கடையை திறப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமையன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் இளமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் சந்திரபோஸ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் உஷா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்