கரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா உள்ள கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்(27.8.2022) திடீரென மழை பெய்தது. இதில் புத்தக அரங்கிலும் மழை நீர் புகுந்ததால் சேரும் சகதியுமானது. உடனடியாக மாவட்ட நிர்வாகம், கரூர் மாநகராட்சி செயல்பட்டு கிராவல் மண் கொட்டி புத்தக அரங்க வளாகம் சீர் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் பிற்பகலிலேயே புத்தக திருவிழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்தை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கரூரில் நடைபெறும் புத்தக திருவிழா மழைநீர் புகுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் புத்தக நடைபெறும் அரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பெய்ததால் சிறிதளவு மழை நீர் அரங்கத்தில் புகுந்தது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை இணைந்து அந்த அந்த இடம் சீர் செய்யப்பட்டது. முதல் மூன்று அரங்குகள் இருந்த சிறிதளவு புத்தகங்களை மழை நீரால் சேதமடைந்தன அவற்றுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.