
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசல் ஓடை கடற்கறை பகுதியில் முகத்துவாரம் ஆழப்டுத்தும் பணிகள் தமிழக முதல்வரின் ஆணையின் பேரில் ரூ. 38 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் படகுமூலம் சென்று பணிகள் நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இவருடன் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன், வருவாய்துறையினர், காவல்துறையினர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
அப்போது கிள்ளை பேரூராட்சியின் தலைவர் மல்லிகா, மற்றும் துணைத்தலைவர் கிள்ளைரவீந்திரன், பேரூராட்சியில் குடிநீர் தேவைகள், முடசல் ஓடை, பில்லு மேடு, பொன்னந்திட்டு உள்ளிட்ட பகுதியில் 40 வீடுகளுக்குப் பட்டா வழங்க வேண்டும், முழுக்குத் துறை மயான பிரச்சனை, கிள்ளை கடை வீதியில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுக்க வேண்டும், எம்.ஜி.ஆர் நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் மக்கள் தொழிலுக்குச் செல்லும் வகையில் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தனிதனி ரேஷன் கடை உள்ளிட்ட தேவைகளைச் செய்துதர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாகச் செய்துகொடுப்பதாக உறுதி அளித்தார்.