கள்ளக்குறிச்சி மாவட்டம் வரம் சரம் காவல் நிலைய பகுதியில் உள்ள புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது நாராயணசாமி. இவர் கொங்க ராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வாடகை பாத்திரக்கடை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அதே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமு(30) என்பவர் நேற்று(26.5.2022) காலை நாராயணசாமி வாடகை பாத்திரக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது நாராயணசாமி கடைக்கு வருபவர்களுக்கு இடையூராக உள்ளது என்றும், அதனால் இரு சக்கர வாகனத்தை எடுத்து வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி உள்ளனர்.
இந்த நிலையில் அன்று இரவு சுமார் 8 மணி அளவில் கடையை மூடிவிட்டு நாராயணசாமி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வீட்டிற்கு கடும் கோபத்துடன் சென்ற ராமு நாராயணசாமியை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து தகராறு செய்துள்ளார். அப்போது ராமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த நாராயணசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாராயணசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த நாராயணசாமியின் உறவினர்கள் கொலை செய்த ராமுவை உடனடியாக கைது செய்யக்கோரி புது உச்சிமேடு பஸ் நிறுத்தத்தில் இரவு 10 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கொலையாளியை விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராமுவை தீவிரமாக தேடி வருகின்றனர். கடைக்கு முன்பு பைக்கை நிறுத்த கூடாது என்றது சின்ன பிரச்சனை ஒரு கொலையில் முடிந்துள்ளது இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.