உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.
ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.
அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.