உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.
அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள் இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது.