Skip to main content

தாயை முன்வைத்து நடக்கும் ஈகோ யுத்தம்; நண்பருக்காக இன்ஸ்பெக்டர் பழிவாங்குகிறாரா?

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Dispute between brothers over building house for mother in Tiruvannamalai

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா கீழ்கொடுங்காலூர் அருகேயுள்ளது எழுப்பாக்கம். இந்த கிராமத்தை சேர்ந்த நடேசப்பிள்ளை – பச்சையம்மாள் தம்பதியருக்கு 5 மகன்கள், இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தங்களது பிள்ளைகளோடு சென்னை, செங்கல்பட்டு என வசித்துவருகின்றனர். நடேசப்பிள்ளை மறைந்ததால் 75 வயதான பச்சையம்மாள் கிராமத்திலுள்ள கூரை வீட்டில் வசித்துவந்தார். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்க, இப்போது இது காவல்நிலையத்தில் புகாராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய பச்சையம்மாளின் மூத்த மகன் விவசாயி ஏழுமலை, எனக்கு திருமணமானதும் நான் சொந்த ஊரிலேயே வீடு கட்டிக்கிட்டு தனியா வந்துட்டேன். என் தம்பிகள் சென்னை, செங்கல்பட்டில் வசிக்கறாங்க. அப்பா இறந்து 15 வருடமாகுது. 10 ஏக்கர் விவசாய நிலமிருக்கு, ஒரு கூரை வீடு இருக்கு. அந்த வீட்டில் எங்கம்மா மட்டும் தனியா இருந்தாங்க. சொத்துகள் எதுவும் பாகம் பிரிக்கல. திருவிழா காலங்களில் தம்பிகள் ஊருக்கு வந்துபோவாங்க. வீடு கட்டித்தரச்சொல்லி எங்கம்மா கேட்டதால் சென்னையில் பில்டராக இருக்கற எனது கடைசி தம்பி சுப்பிரமணி பொதுவில் வீடு கட்டிதருவதற்கு அட்வான்ஸ் தந்து வேலையை ஆரம்பித்தான். எனது மூன்றாவது தம்பி வெங்கடேசன் சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் நடத்திக்கிட்டு இருக்கான். அதுயெப்படி தனியா ஒருத்தரே வீடு கட்டலாம் அப்படின்னு பிரச்சனை செய்தான். கான்ட்ராக்ட் காரருக்கு 3 லட்ச ரூபாய் அட்வான்ஸ் தந்தான். கல்லு, மண்ணுன்னு இறக்கனான். சின்னதம்பியும் ஜல்லி, மண் இறக்குனதும் நாங்க வீடு கட்டவிடாமல் தடுக்கிறோம்னு காவல்நிலையத்தில் போய் புகார் தந்தான். போலீஸ் விசாரிச்சது. நாங்க கூட்டா சேர்ந்து வீடு கட்டித்தர்றன்னு எழுதி தந்துட்டு வந்தோம். அதுக்கப்பறம் அது கிடப்புலயே இருந்தது.

 

இப்போ கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போலீஸ் வந்து விசாரணைக்கு வந்து கூப்பிட்டது. நான் கீழ்கொடுங்காலூர் காவல்நிலையத்துக்கு போனேன். வீடு கட்ட தடுக்கறிங்கன்னு வெங்கடேசன், பச்சையம்மாள் உங்க மேல புகார் வந்துயிருக்குன்னு சொன்னாங்க. நான் கடைசி தம்பி சுப்பிரமணிக்கிட்ட சொன்னன். விசாரணைதானே போய்ட்டு வாங்கன்னு சொன்னான். நான் போய் நாங்க தடுக்கலன்னு சொன்னன். அங்க விசாரிச்சவங்க கடுமையா பேசி, எந்த பிரச்சனையும் பண்ணலன்னு கையெழுத்துப் போடச்சொன்னாங்க போட்டுட்டு வந்தேன். என்னை ஸ்டேஷன்ல போலீஸ்காரங்க அசிங்கப்படுத்தனதால் 5 வருஷமா குடிக்காம இருந்த நான் குடிச்சிட்டு எங்கம்மாவிடம் சண்டைப் போட்டேன். உடனே நான் என் தம்பிய அடிக்கப்போனதா சொல்லி என் மேல புகார் தந்து எப்.ஐ.ஆர் போட்டுட்டாங்க” என்றார்.

 

“சுப்பிரமணி, புகார் குறித்து விசாரணை நடந்தபோதோ, சண்டை போட்டுக்கிட்டதா சொல்லும்போதோ நான் சம்பவயிடத்திலேயே இல்லை. ஆனால் எப்.ஐ.ஆரில் என் பெயரை சேர்த்துயிருக்காங்க. ரகசியமாக எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம் இன்ஸ்பெக்டர் பாலு தான். தொழில் ரீதியாக பழக்கமான விழுப்புரத்தை சேர்ந்த பிரபுவுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கு. நீண்ட நாள் பழகியவர். தொழில் பிரச்சனையில் என்னை ஏமாற்றினார். எங்க குடும்ப விவகாரம் தெரிந்துக்கொண்டு என்னிடம் பேசினார். என் அண்ணன் புகார் தந்த அன்று என்னிடம் பேசினார். அங்க இன்ஸ்பெக்டர் என் நண்பர் தான், நான் பார்த்துக்கறன்னு சொன்னார். அவராதான் உதவி செய்யறன்னு வந்து இருவரும் சேர்ந்துக்கிட்டு எங்கமேலயே எப்.ஐ.ஆர் போடவச்சிட்டாங்க. சிவில் விவகாரத்தில் போலீஸ் இப்படி நடந்துக்கறாங்க” என்றார்.

 

இதுப்பற்றி வெங்கடேசனிடம் நாம் கேட்டபோது, “எங்கள் சொத்துக்கள் எதுவும் பாகப்பிரிவினை இன்னும் நடக்கல. எங்கம்மா குடியிருந்தது பொதுவான இடம். 1800 சதுர அடி இருக்கற அந்த இடத்தில் யாரையும் ஆலோசிக்காமல் தனியா வீடு கட்டப்போனான் சுப்பிரமணி. அதுவும் அவனா கட்டப்போகல. அரசாங்கம் முதலமைச்சர் வீடு வழங்கும் திட்டத்தில் கூரை வீடாக இருந்ததால் எங்கம்மா பெயருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுயிருக்கு. 2.50 லட்சத்தில் வீடு கட்டச்சொல்லி ஆர்டர். கொஞ்சம் கூடுதலாக பணம் போட்டு வீடு கட்டச்சொன்னதை கேட்காம அவனே கட்ட பார்த்தான். எங்கம்மா எல்லோரும் சேர்ந்து வீடு கட்டுங்கன்னு சொல்லியும் கேட்கல. நான் எங்கம்மாவுக்கு வீடு கட்டித்தர்றன்னு நானும் அட்வான்ஸ் தந்தன். போலீஸ்க்கு போனோம். அங்க சொத்துக்களை பிரிச்சிக்கறது, புதியதாக கட்டப்படும் வீடு எங்கம்மா பெயரில் எழுதி வைப்பது, அவுங்க காலத்துக்கு பின் யாருக்கு வேண்டுமோ எடுத்துக்கறதுன்னு எழுதி தந்துட்டு வந்தோம். 

 

அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அப்போ வீடு கட்ட கடக்கால் எடுத்ததைப் பார்த்து பி.டி.ஓ அலுவலகத்தில் இருந்து எங்கம்மா பெயருக்கு 25 ஆயிரம் பணம் அனுப்பியிருக்காங்க. அந்த கடக்காலை சுப்பிரமணி, ஏழுமலை சேர்ந்து துருத்துட்டாங்க. இதைப்பார்த்த அதிகாரிகள் பணம் வாங்கிட்டு ஏமாத்தறியாம்மா, உன் மேல நடவடிக்கை எடுப்போம்னு சொன்னதை கேட்டு எங்கம்மா பயந்துப்போய் எனக்கு போன் செய்தாங்க. அதுக்கப்பறம் வந்து என் பெரிய அண்ணன் ஏழுமலையிடம் கேட்டபோது சரியா பதில் சொல்லவில்லை, அதனால்தான் புகார் தந்தது. வீடு கட்ட தடுக்கலன்னு எழுதி தந்துட்டு வந்து, பெத்த அம்மாவை அசிங்க அசிங்கமா பேசனார். சுப்பிரமணி இருக்கான் உன்னை வெட்டிடுவன்னு சண்டைப்போட்டார் அதனால் தான் புகார் தந்தது. இப்போது வீடு கட்டக்கூடாதுன்னு எனக்கும், அம்மாவுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கான் சுப்பிரமணி” என்றார்.

 

இதுப்பற்றி கீழ்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் பாலுவிடம் கேட்டபோது, “இது அவுங்க குடும்ப விவகாரம். அந்தம்மாவுக்கு அரசாங்கத்தின் தொகுப்பு வீடு தந்துயிருக்காங்க. அதில்தான் வீடு கட்டித்தரச்சொல்லி கேட்கறாங்களே தவிர அம்மா தனியா கூரை வீட்ல இருக்கு அதை நல்லா பார்த்துக்கனம்னு எந்த புள்ளையும் நினைக்கல இதுதான் நிஜம். கடக்கால் எடுத்து வீடு கட்டும் வேலையில் இறங்கியதால் அரசாங்கம் முதல் கட்டமாக 25 ஆயிரம் பணம் தந்துடுச்சி. இவுங்க சண்டையில் அந்த கடக்காலை சுப்பிரமணி ஜே.சி.பி கொண்டு வந்து மூடிட்டாங்க. ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் இதனால் பச்சையம்மாளை எச்சரித்துவிட்டு போயிருக்காங்க. இதனால்தான் அந்தம்மா வீடு கட்ட விடமாட்டேன்கிறாங்கன்னு வெங்கடேஷ்சோட வந்து புகார் தந்தாங்க. வீடு கட்டறன்னு இருந்த கூரை வீட்டையும் இடிச்சிட்டாங்க. பெரிய மகனோட சண்டையால் அந்தம்மா பகலில் புளியமரத்தடியிலயும், இரவில் பயன்படுத்தாத பொது கழிப்பிட பில்டிங்கல படுத்துக்கிடந்துயிருக்காங்க. எப்படி வாழ்ந்த நான், என்னை அசிங்கப்படுத்தறாங்களேன்னு அந்தம்மா வந்து அழுவறாங்க. இரண்டு முறை எழுதி வாங்கிக்கிட்டு சமாதானம் பேசி அனுப்பியது. 

 

விசாரணைக்கு வரச்சொல்லியும் சுப்பிரமணி வரல. சுப்பிரமணிக்காக சிலர் என்னிடம் பேசினாங்க, அதில் பிரபுவும் ஒருவர். எல்லோரிடமும் முழுவதையும் விளக்கமாக சொன்னன். முழுவதையும் கேட்ட பிரபு அதன்பின் பேசல. சமாதானம் செய்து அனுப்பிய அன்று மாலையே பச்சையம்மாளை அவரது பெரிய மகன் தண்ணியை போட்டுவிட்டு போய் அசிங்கமா பேசியுள்ளார். அங்கே போன வெங்கடேசையும் மிரட்டியிருக்கார். அவர் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தந்து எப்.ஐ.ஆர் போட்டே ஆகனும்னு சொன்னார். ஏழுமலை விவரம் தெரியாத, படிக்காத பாமரர். கிராமத்தான், முரட்டுதனமா பேசுவார், அப்படித்தான் பேசினார். ஏழுமலையை தூண்டிவிடுவது சுப்பிரமணின்னு புகாரில் சொல்லியிருக்கார். அந்த செக்ஷனில் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கு. எப்.ஐ.ஆர் போட்ட எங்களுக்கு கைது செய்ய தெரியாதா? குடும்ப விவகாரம் இப்போ சண்டை போட்டுக்குவாங்க பிறகு சமாதானமாகிடுவாங்கன்னு விட்டுட்டோம். சிவில் விவகாரத்தில் போலீஸ் தலையிடுதுன்னு எனக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பியிருக்கார் சுப்பிரமணி. அம்மா மீது பாசத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை, இருவருக்கும் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்கிற ஈகோ, அதில் பெத்த அம்மாவை வைத்து விளையாடுகிறார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்