கரூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஒரு லட்சத்து அறுபதாயிரம் திருக்குறள் பொறித்த ராக்கி கயிறுகள் மற்றும் 50 ஆயிரம் சிறப்பு ராக்கி கயிறுகளை முப்படை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
நமது இந்திய முப்படை வீரர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ராக்கி (சகோதரத்துவ கயிறுகளை) கயிறுகள் கரூர் பரணி பார்க் பள்ளி அனுப்பி வருகிறது. இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் இருந்து ராக்கி கயிறுகளை புதுதில்லி ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முனைவர் ராமசுப்பிரமணியன் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்விற்கு தனியார் பள்ளி கல்விக் தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தனர்.
தனியார் பள்ளி முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில் பரணி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருக்குறள் எண் 766-ஐ தமிழ், ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, அசாமி, குஜராத்தி, பெங்காளி, சந்தாளி, கொங்கணி, ஒடியா, நேபாளி, சிந்தி உள்ளிட்ட 18 இந்திய மொழிகளில் மொழிப் பெயர்த்து தயாரித்த திருக்குறள் ராக்கி கயிறுகள் 1,60,000, சிறப்பு ராக்கி கயிறுகள் 50,000 ஆக மொத்தம் 2,10,000 ராக்கி கயிறுகள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து ராணுவ வீரர்களுக்கான ராக்கிகளை ஒருங்கிணைக்கும் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கூறுகையில்,''நாம் அனைவரும் நமது நாட்டின் முப்படைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நமது வீரர்கள் இல்லாமல் நாம் ஒருபோதும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியாது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது'' என்றார்.