கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஏரிக்கரையில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சின்னசேலம் ஏரிக்கரைப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது ஏரிக்கரையின் கிழக்குப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆய்வாளர் கூறும் போது.
கொற்றவை
கொற்றவை ஒரு பழமையான பெண் தெய்வமாகும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கொற்றவை பற்றிய குறிப்புகள் உண்டு. பழையோள், கானமர் செல்வி, பாய்கலைப்பாவை, காடுகிழாள் என்ற பெயர்களும் கொற்றவைக்கு உண்டு. கொற்றவையின் உருவ அமைப்பை சிலப்பதிகாரம் விரிவாக எடுத்துரைக்கிறது. மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்து இளங்கோ அடிகள் விரிவாக விளக்கி உள்ளார்.
கானகத்தில் வசித்த வேட்டுவர்கள் தாங்கள் வேட்டைக்குச் செல்லும் முன் வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டுச் சென்றுள்ளனர். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் கொற்றவைக்கு வீரன் ஒருவனை நவகண்டம் கொடுக்கச் செய்துள்ளனர். பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக இருந்துள்ளது. இவர் பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக அறியப்படுகிறார். பிற்காலத்தில் துர்க்கை, காளி என்ற பெயரில் கொற்றவை வழிபாடானது மாற்றமடைந்தது. பெரும்பாலும் ஏரி, ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளின் அருகிலேயே கொற்றவை சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
சின்னசேலம் கொற்றவை
சின்னசேலம் ஏரியின் கிழக்குக் கரையில் ஒரு கொற்றவை சிற்பமானது காணப்படுகிறது. இது கிராமிய பாணியில் அமைந்துள்ளது. உள்ளூர் தலைவர்களால் உள்ளூர் சிற்பிகள் மூலம் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13ஆம் நூற்றாண்டில் இப்பகுதியானது மகதை நாட்டில் இருந்துள்ளது. மகதை மன்னர் பொன்பரப்பின வாணகோவரையன் என்பவர் இப்பகுதியை ஆண்டு வந்தார். அவர் காலத்தில் செய்யப்பட்ட கொற்றவையாக இதைக் கருதலாம். பல்லவர் கால பாணியைப் பின்பற்றி இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 83 செ.மீ, அகலம் 73 செ.மீ ஆகும். கால்பாதமும் அதற்கு கீழ் உள்ள பகுதியும் பூமியில் புதைந்துள்ளது. எட்டுக் கரங்களுடன் நீண்ட மகுடம், காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரபளி, சவடி போன்ற அணிகலன்களும் அலங்கரிக்கின்றன. மார்புக்கச்சை காட்டப்பட்டுள்ளது. வலது பின்கரங்களில் பிரயோகசக்கரம், நீண்டவாள், அம்பு போன்ற ஆயுதங்கள் உள்ளது. வலது முன்கரம் இடுப்பின் மீது வைத்த நிலையில் உள்ளது. இடது மேற்கரங்களில் சங்கு, வில், கேடயம் போன்றவை காணப்படுகின்றன. இடது முன்கரமானது சிங்கத்தின் தலை அருகே உள்ளது. வழக்கமாகக் கொற்றவையின் வயிறு ஒட்டிய நிலையில் காட்டப்படும். ஆனால் இதில் சற்று பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையும் ஆடை முடிச்சும் உள்ளது. வலதுகால் நேராகவும் இடதுகால் சற்று மடித்த நிலையிலும் உள்ளது.
பல்லவர் கால கொற்றவையில் காணப்படும் மானும், சிங்கமும் இச்சிற்பத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கொற்றவையின் வாகனமான 'மான்' வலதுபுறம் உள்ளது. பாய்ந்து ஓடும் நிலையில் மான் உள்ளது. நீண்ட கொம்புகள், முன்கால் தாவும் நிலையிலும் பின்கால் தரையில் அழுத்திய நிலையிலும் பெரிய அளவில் மான் காட்டப்பட்டுள்ளது. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை சிற்பத்தில்தான் இப்படி மான் காட்டப்படுவது வழக்கமாகும். இடது புறம் சிங்கமானது சிறிய அளவில் உள்ளது. பாதத்திற்குக் கீழ் மண்ணில் புதைந்துள்ளதால் காலுக்குக் கீழ் காட்டப்படும் எருமை தலையும், நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரனும், வணங்கிய நிலையில் இருக்கும் அடியாரும் நமக்குத் தெரியவில்லை. இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தார்.