கிருஷ்ணகிரி அருகே நடத்திய அகழ்வாய்வில் 2,500 ஆண்டுகள் பழமையான இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின. கடந்த மூன்று மாதங்களாக இப்பணிகள் நடந்துவருகின்றன. அகழ்வாய்வுத்துறை இயக்குநர் சக்திவேல், அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோருடன் சென்னையைச் சேர்ந்த எம்.ஏ., தொல்லியல்துறை மாணவர்களும் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அப்பகுதியில் பழமையான கல் திட்டையைக் கண்டறிந்தனர். அதில், 70 செ.மீ. நீளமுள்ள பழங்கால இரும்பு வாள் இருப்பது தெரியவந்தது. அந்த வாள் 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழ்வாய்வுத்துறை இயக்குநர் சக்திவேல் கூறுகையில், ''மயிலாடும்பாறையில் உள்ள சானாரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. மலையின் கீழ் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கற்கால ஈமச்சின்னங்கள் மூலம் மனித இனம் இருந்ததற்கான ஆதாரங்களை உறுதியாகச் சொல்ல முடிகிறது.
இங்கு முன்னோர்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளைக் கொண்டிருந்தனர், இங்கு வாழ்ந்தவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980, 2003ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், துறை சார்பில் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட ஆய்வில் மனித எலும்புக்கூடுகள் எதுவும் நேரடியாக கிடைக்கவில்லை. எனினும், ஆய்வுகளை தொடர்ந்துவருகிறோம்.
தற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 40 செ.மீ. நீளமுள்ள வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கைப்பிடி பகுதி கிடைக்கவில்லை. கைப்பிடி பகுதி 30 செ.மீ. நீளம் இருக்கலாம். இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தது எனக் கருதுகிறோம். இந்த வாளின் காலத்தைத் துல்லியமாக கண்டறிய பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பிறகுதான் அதன் காலக்கட்டத்தின் உண்மை நிலை தெரியவரும்'' என்றார்.