அரசு மற்றும் தனியார்த்துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தடையை மீறி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்தியூர் முதல் மைசூர் வரை செல்லும் சாலையில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாகக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.
2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிய விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நான்கு மணி நேர வேலையும், முழு நேர ஊதியமும் வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார்த்துறை பணிகளிலும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் படி, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள், முழக்கங்களை எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து தடையை மீறி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.