தமிழர்களின் சிலம்பாட்டம், புலி ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை விளையாடி அசத்தியதோடு, பொங்கல் வைத்து சமத்துவமாக கொண்டாடிய வீரத்தமிழர் சிலம்பாட்ட குழுவினருக்குச் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இளைய வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தில் அகனி, கொள்ளிடம், செம்மங்குடி, தென்பாதி உள்ளிட்ட சீர்காழி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சிலம்பம், மான் கொம்பு, வாள்வீச்சு அலங்காரச் சிலம்பம், பொய்க்கால் குதிரைச் சிலம்பம், இரட்டைக் கம்பு சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாற்றுத் திறனாளியான சிலம்பாட்ட ஆசான் விமல் என்பவர் பயிற்றுவித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினர். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக இயற்கையை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம், வாள்வீச்சு, மான்கொம்பு, இரட்டைக் கம்பு சுற்றுதல், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாட்டுப்புறப் பாடல்கள், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.