காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் தன்னிச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் என பலர் இந்த இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாமல் பரப்பரை செய்ததாக பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரில். தேர்தல் விதிகளை மீறியதாக சீதாலட்சுமி உட்பட ஐந்து பேர் மீது நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பரப்புரை மேற்கொண்டதாக சீதாலட்சுமி மீது இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.