தமிழகம் முழுவதும் வருகிற 27, 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி, ஊராட்சித் தலைவர் பதவிக்கு சுந்தரவடிவேலின் மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். ஏற்கனவே இவர், கடந்த முறை செட்டிநாயக்கன்பட்டி பேரூராட்சி தலைவராகவும் இருந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு ஊராட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம், பத்மாநகர், ஈ.பி.காலனி, தாய் மூகாம்பிகை நகர், ஏழுமலையான் நகர், பாலக்குட்டை, அருணாசலம் நகர், நந்தனார்புரம், சந்தனகுடில், கள்ளிப்பட்டி, முடக்குராஜக்காபட்டி, எஸ்.பெருமாள் கோவில்பட்டி, ரமண மஹரிஷி நகர், ராஜ் நகர், காந்தி நகர், சத்யா நகர், சரளபட்டி, சண்முகபுரம், அலக்குவார்பட்டி, அழகர்சிங்கம்பட்டி, இந்திரா நகர், முத்துராஜ் நகர், ராஜாக்கா பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, சின்னையாபுரம், காந்திநகர் காலனி, செட்டிநாயக்கன்பட்டி, வேதாத்திரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
செட்டிநாயக்கன்பட்டி சிவன்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்கு வேட்பாளர் வளர்மதி பிரியாணி விருந்து வைத்தார். இதில் அப்பகுதிகளிலிருந்த 500- க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக படையெடுத்து வந்து பிரியாணிகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டும், பிளேட்டில் பிரியாணியை வாங்கி கொண்டு வீடுகளுக்கும் சென்றனர்.
இது அப்பகுதியில் ஒரு திருவிழா போல் பெரும் பரபரப்பாக இருந்து வந்தது. இந்த தகவல் தேர்தல் அதிகாரி பறக்கும் படை தேர்தல் அதிகாரியான சண்முகத்திற்கு எட்டவே அதிகாரிகளுடன் அந்த நூற்பாலைக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது ஆங்காங்கே மக்கள் பிரியாணி வாங்க வரிசையில் நின்றிருந்ததையும், வாங்கிய பிரியாணிகளை கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
இது சம்மந்தமாக அந்த நூற்பாலை உரிமையாளர் பாஸ்கரனிடம் தேர்தல் அதிகாரி கேட்டபோது, ஓட்டுக்காக மக்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கவில்லை. எனது மகனின் பிறந்த நாளை ஒட்டி பகுதி மக்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தோம் என்று மலுப்பலாக பதில் கூறினார். இருந்தாலும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற பிரியாணி விருந்து நடத்தக்கூடாது என தேர்தல் அதிகாரி எச்சரித்துச் சென்றார். ஆனால் ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வளர்மதிதான் வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து, அதன்மூலம் வாக்கு சேகரிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆக தேர்தல் வருவதற்குள்ளேயே வாக்காளர்களை கவருவதற்காக முதன் முதலில் பிரியாணி விருந்து வைத்து மக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.