தமிழகம் முழுவதும் காவல்துறையில் டிஎஸ்பி நிலையிலான 50 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் மற்றும் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாறுதல் செய்து, டிஜிபி ஜே.கே. திரிபாதி வியாழக்கிழமை (நவ. 21) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி முத்துசாமி, நாமக்கல் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், சேலம் மாநகர தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையர் திருமேனி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊரக உள்கோட்ட டிஎஸ்பியாகவும், அங்கு பணியாற்றி வந்த டிஎஸ்பி சங்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஓசூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மீனாட்சி, காஞ்சிபுரம் மாவட்டம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருச்சி மாவட்ட பணியிடை பயிற்சி மைய டிஎஸ்பி அண்ணாத்துரை, சேலம் மாநகர குற்ற ஆவணக் காப்பக உதவி கமிஷனராகவும், கோவை சிபிசிஐடி பிரிவு டிஎஸ்பி லட்சுமணகுமார், சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.