கரோனா சிகிச்சைக்கு திண்டுக்கல்லில் சித்த மருத்துவ மையம் அமைக்கலாம் என திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி யோசனை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் தேனி மாவட்டத்திற்கு புதிய டி.ஐ.ஜி.-யாக பொறுப்பேற்ற முத்துசாமி ஏற்கனவே கரோனாவில் பாதிப்பில் இருந்து மீண்டுவந்தவர். அவர் அலோபதி, சித்த மருத்துவம் இரண்டையும் பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் கரோனா தொற்றறிலிருந்து விடுபட்டும் இருக்கிறார்.
காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் முகக்கவசம், கையுறை, கபசுரக் குடிநீர் வழங்கிய பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. முத்துச்சாமி, 'பொதுமக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களில் இருந்து பார்க்க வருபவரை ஊக்கப்படுத்த வேண்டாம். வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு நாளில் 20 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். வீடு திரும்புகையில் சோப்பால் கைகளைக் கழுவ வேண்டும். விட்டமின் சி ஆர்சனிக் அமிலம் என்ற ஹோமியோபதி மாத்திரைகளை மருத்துவ வழிகாட்டுதலின்படி எடுத்துக்கொள்ளலாம். தேனி போன்று திண்டுக்கலிலும் சித்த மருத்துவ மையம் ஆரம்பிக்க வேண்டும். இந்த கரோனா தொற்று தொடர்பாக காவல்துறை உதவிக்கு 100 என்ற எண்ணிலும் மாவட்ட போலீஸாரை 98941 01520 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசலாம்' என்று கூறினார்.
கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம் அமைப்பது பற்றி டி.ஐ.ஜி. முத்துசாமி யோசனை கூறி இருப்பது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.