கரோனா எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இருந்தாலும் அவ்வப்போது காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வருகிறார்கள்.
இந்த நிலையில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு இறைச்சி கடைகளுக்கு தடை விதித்தது. இருந்தாலும் இறைச்சிக் கடைக்காரர்கள் மறைமுகமாக அங்கங்கே விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் இறைச்சி கடைகள் வைப்பதற்கு அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து அறிவித்துள்ளது.
அதனடிப்படையில்தான் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகரில் இறைச்சிக் கடைகளை எங்கெங்கே வைக்கவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தற்காலிகமாக மூன்று இடங்களில் ஆட்டு இறைச்சி கடைகள், 40 கோழி இறைச்சி கடைகள் 60, மீன் இறைச்சி கடைகள் 15 என 115 கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார், அதில் திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 50 கடைகள், அதுபோல் கோவிந்தாபுரத்திலுள்ள நூற்றாண்டு பள்ளியில் 20 கடைகள், அதுபோல் நத்தம் ரோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் 45 கடைகள் என 115 கடைகளை ஒதுக்கி இருக்கிறார் .
இந்த கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சிக் கடைகளில் பொதுமக்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இறைச்சியை பிரித்து வழங்கும் போது தாமதம் ஏற்படும். அதுபோல் கூட்டமும் கூட வாய்ப்புள்ளது. அதனால் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என பார்சல் முறையில் மட்டுமே இறைச்சி வழங்கப்படவுள்ளது என வலியுறுத்திருக்கிறார்.
அதுபோல் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இறைச்சிக்கடைகள் எல்லாம் தினசரி காலை 6 மணியிலிருந்து ஒரு மணி வரை செயல்படும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். அதனடிப்படையில் இறைச்சி பிரியர்கள் ஆர்வமாக மாநகராட்சிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் இறைச்சிகளை வாங்கி வாங்கி சென்று வருகிறார்கள்.