கொடைக்கானல் கீழ்மலை, பாச்சலூர் மலைக் கிராமத்தில் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் படிக்கும் பள்ளியின் அருகிலேயே உடல் எரிந்த நிலையில் நேற்று முன்தினம் (15.12.2021) மீட்கப்பட்டார். அவர், அருகில் இருந்த ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தகவல் காவல்துறைக்குத் தெரியவரவே அங்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் பெற்றோரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா ஆகியோர் ஸ்பாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, “அந்த மாணவி இறந்த நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும், தடயவியல் சோதனை, மோப்ப நாய்களை வைத்து சோதனை உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது, பிரிவு 174இன் படி சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்யப்பட்டுவருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் சிறுமியின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகு அடுத்தக்கட்ட விசாரணை தொடரும். அதேபோல், அந்தச் சிறுமியின் உடலில் தீக்காயங்கள் மட்டுமே இருக்கிறதே தவிர, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததற்கான எந்த அடையாளமும் இல்லை” என்று கூறினார்.