திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் மாணவர்கள் மத்தியில் மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வண்ணம் மும்மத விழாக்களை சிறப்பாக நடத்துவது வழக்கம். இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

மேடையில் குடில் அமைத்து அதில் கிறிஸ்து பிறப்பது போல் குழந்தை சேசுவின் சுருபம் வைத்திருந்தனர். அதன் பின்னர் தேவதைகள் மற்றும் மூன்று சீடர்களுக்கு கிறிஸ்து பிறப்பை காட்டும் வண்ணம் வால் நட்சத்திரம் வழிகாட்டுதலின்படி சீடர்கள் அதனை பின்தொடர்ந்து வந்து கிறிஸ்து பிறந்த இடத்தை வந்தடைந்தது போல் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கிறிஸ்து பிறப்பை பற்றிய பாடல்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் பாடினார்கள். நிறைவாக கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வந்தவுடன் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் துள்ளி குதித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பிறகு மேடையில் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய போது பள்ளிக்குழந்தைகள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமும் 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் தேவதை ஏஞ்சல் வேடமும் அணிந்து நடனமாடினர். கிறிஸ்துமஸ் விழா குறித்து பள்ளியின் முதல்வர் திலகம் கூறுகையில், "எங்கள் பள்ளியில் மும்மதங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் படிக்கின்றனர். மும்மத விழாக்களை கொண்டாடும் போது அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் நாங்கள் ஒவ்வொரு வருடமும் மும்மத விழாக்களை சிறப்பாக நடத்தி வருகிறோம். வரும் 23ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை என்பதால் முன்னதாகவே கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினோம். கிறிஸ்துமஸ் விழாவிற்காக எங்கள் பள்ளி மாணவர்களில் பாடல் குழு ஏற்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.