கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 355 பதவிகளுக்கு 1,238 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், செந்தில் குமார் ஆகியோர் நேற்று (23.09.2021) வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்தனர். இதில், 3 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 13 வார்டு மாவட்டக் கவுன்சிலர் என அதிமுக சார்பில் தாக்கல் செய்த நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தனர். முறையாக அனைத்து ஆவணங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தும் வேண்டுமென்றே அதிகாரிகள் மனுவை நிராகரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பிரபு, இன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், நகரச் செயலாளர் சியாம் சுந்தர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சந்தித்து வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டது ஏன் என்று காரணம் கேட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய காரணத்தைக் கூறவில்லை என்று கூறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு தலைமையில் இரவு 11 மணி அளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைதுசெய்தனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு, “எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக நான்கு பேரும் முறையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது அரசியல் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.