திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று மாலை பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி உடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக திருக்கோயிலின் உள்பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண கோலமிட்டு சாமி உருவங்கள் பக்தர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோட்டை மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தது. மேலும் பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி குழுவினரின் சார்பாக நேற்று கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை அம்மன் வீற்றிருக்க வலது புறம் சரஸ்வதியும் இடதுபுறம் மகாலட்சுமியும் இருப்பது போல் மாசி திருவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார். கோவில் வளாகத்தில் வண்ணப் பொடிகள் மற்றும் பூக்களால் வரையப்பட்டிருந்த மாசாணி அம்மன், வரலட்சுமி நோன்பு செட், வராஹி அம்மன், சிவலிங்கம் உள்ளிட்ட சாமி உருவங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து தான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலையில் கோட்டை மாரியம்மன் பூவால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் நகரில் உள்ள முக்கிய வீதிகளான மேற்கு ரத வீதி. பழனி ரோடு. கிழக்கு ரத வீதி என முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் பவனி வந்ததைக் கண்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக நின்று உதிரிப் பூக்களை காணிக்கையாக செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்தனர். மேலும் கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வருவதைக் கண்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு பிரசாதம் நீர் மோர் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றமும், வரும் மார்ச் மூன்றாம் தேதி பூக்குழி இறங்குதல் மற்றும் 4ம் தேதி தசாவதார விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஊரடங்கு அனைத்தும் தளர்வுகள் செய்து நடைமுறை வாழ்க்கை தொடர்ந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோட்டை மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.