திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது கட்டக்காமனபட்டி கிராமம். இக்கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 160 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்டவற்றை சிறப்பாக செயல்பட்டு மாவட்ட அளவில் பல விருதுகளை குவித்த இந்த பள்ளிக்கு கட்டக்காமன்பட்டி கிராம மக்கள் பள்ளியை மேம்படுத்தும் வகையில் சீர்வரிசை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கிராம மக்கள் சார்பாக சீர் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கட்டகாமன்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த கிராமக்கள் அங்கிருந்து தாரை, தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க பள்ளியை நோக்கி தலையில் சீர் பொருட்களை சுமந்தவாறு வந்தனர். கிராம பெண்கள் தலையில் பழங்கள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், தண்ணீர் பிடிக்கும் பானை சில்வர் குடங்களை ஆகியவற்றை சுமந்தவாறும் மேஜை, நாற்காலிகளுடன் ஊர்வலமக வந்தது கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. பள்ளி வளாகத்திற்கு வந்த கிராம மக்களை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம், அங்கையற்கண்ணி, தலைமை ஆசிரியை விஜயா ஆகியோர் கிராம மக்கள் கொண்டு வந்த சீர் பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.